கார்த்திகைத் தீபத்திருவிழா
Posted in Editor's Desk on 11/28/2009 12:00 pm by admin
‘கார்த்திகை தீபம்’ மூன்று நாட்கள் தீபத்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. தவிர, இம்மாதம் முழுவதும் தமிழகமெங்கும் இல்லங்களில் தீபங்களை ஏற்றி வைக்கும் நேர்த்தியான காட்சியை இன்றும் நாம் பார்க்கக்கூடும். அகல், எண்ணெய், திரி, சுடர் இவை நான்கும் ஒன்று சேரும்போது ‘விளக்கு’ என்று அழைக்கப்படுகிறது. விளக்கின் ஐந்து முகங்களையும் பெண்களின் மன உறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிப்புத் தன்மை, அன்பு இவற்றிற்கு ஒப்பிடுவார்கள். அதனால் கார்த்திகை தீபத்தன்று அனைவரின் வீடுகளிலும் மாலையில் தீபமேற்றி வழிபடுகிறார்கள்.
”அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – என்புருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ் புரிந்த நான் ”
என்று சொல்லி கார்த்திகை மாதத்தில் தினமும் மாலையில் விளக்கேற்றி வழிபட வேண்டும். இம்மாதத்ததில் ஒவ்வொரு சோமவாரத்தன்றும், தமிழக புராதன சிவாலயங்கள் யாவற்றிலும் அந்திப்பொழுதில் அதுவும் மகா பிரதோஷ காலத்தில் “நூற்றியெட்டு” சங்காபிஷேகம் இறைவனுக்குச் செய்யப்பட்டு வருவது வழக்கம்.
தீபம் ஏற்றி வழிபடமுடியாத இடங்களில் பனை ஒலையால் சொக்கப்பானை வேய்ந்து சுவாமியை எழுந்தருளச் செய்து சொக்கப்பானைக் கொளுத்துவர்.
”சொக்கப்பானையை வணங் குவது சொக்கப்பனை வணங் குவது ஆகும்.” சொக்கப்பனாகிய சிவனை ஒளிவடிவாகக் காண்பிப்பதால் இது சொக்கப் பானை ஆகும்.
1. கார்த்திகை தீபவிழா ஆணவ இருளை நீக்கி, ஞான ஒளியை நம்முள் பெருக்க உகந்த விழாவாகும்.
கங்கைக்கு தீபம் ………
இன்றும் தினமும் காசியிலும், ஹரித்துவாரிலும் மாலையில் தீபம் ஏற்றி இலையில் வைத்து பூக்களுடன் ஆற்றில் விடும் பழக்கம் இருந்து வருகிறது. கங்கைக்கு தீபம் காட்டி வழிபடுவது இன்றும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
தஞ்சை மாவட்ட காவிரி தீரவாசிகள் சூரியன் நன்கு மறைந்த பின்னர் இம்மாதத்தில் “மந்தாரை இலை”யினால் செய்யப்பட்ட சிறிய ஓடத்தில் தீபம் ஏற்றி வைத்து, வடநாட்டினர் ஹரித்வாரத்தில் கங்கையில் சோதி வழிபாடு செய்வதை ஒக்க – காவிரியில் சமர்ப்பிக்கின்றனர். அத்தீப ஓடங்கள் ஒளிவீசிக் கொண்டு ஓடும் நதியில் மிதந்து போகும் அற்புதமான காட்சியைக் கண்ணுற்று மகிழ்ச்சி கடலில் மிதக்கிறார்கள்.
பண்டைய நூல்களில் – தீபம் பற்றியச் சிலக்குறிப்புகள்
சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற சங்க நூல்களில் பாவை விளக்குகள் பற்றி முக்கியமாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
”கார்த்திகை தீபக்காட்சிக் கண்டு களித்தவர்களின் கண்கள்தான் கண்கள். மற்றவர்களின் கண்கள் வெறும் புண்கள் ” என்று பொங்கையாழ்வார் கார்த்திகை தீபத்தைப் பற்றிச் சிறப்பாக
குறிப்பிடுகிறார்.
காளிதாசனின் ரகுவம்சத்தில் இந்துமதியின் அழகைப் பற்றி வர்ணிக்கையில், சுயம்வர மண்டபத்தில் இந்துமதி வரும் அழகு தீப ஒளி போன்று, அங்கு அமர்ந்திருக்கும் அரசிளங்குமாரர்களின் மீது பட்டு அவர்களது முகம் ஜொலிப்பதாகக் கூறியுள்ளார்.
திரிசங்கு மன்னன் இழந்த தன்னுடைய நாட்டைக் கார்த்திகை தீப விரதமிருந்து பெற்றான். மாணிக்கவாசகர், ”சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே” என்று சிவபெருமானைக் குறித்துப் பாடியுள்ளார். வள்ளலார் ‘ஒளியின் வடிவம் சிவம்’ என்று கருதி, அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடினார். அப்பர் பெருமான் ‘நமச்சிவாய’ மந்திரமே ஒளிமயமானது என்கிறார்.
ருக்வேதத்தில் இந்திரன் அடுத்தபடியாக அக்னிபகவான் முக்கிய இடம் பெறுகிறார்.
கீதையில் கிருஷ்ண பகவான், விளக்கின் ஒளி போன்று மனதை ஆடாமல், அசையாமல் சஞ்சலமற்று ஒரு நிலைப்படுத்த வேண்டும் என்கிறார்.
திருமூலரும் தீபவழிபாட்டை பற்றி திருமந்திரத்தில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்:
”விளக்கொளியாகிய மின் கொடியாளை
விளக்கொளியாக விளங்கிடு நீயே !
விளக்கிடு மெய்நின்ற ஞானப் பொருளை
விளங்கிடுவார்கள் விளங்கினர் தானே !
என்று சிறப்பித்துக் கூறுகிறார்.
”நலமிகு கார்த்திகை நாட்டவரிட்ட
தலைநாள் விளக்கில் தகைமை யுடைவளாகி…”
என்று கார்நாற்பது கூறுகிறது.
நன்மைமிக்க கார்த்திகை விழாவில் நாட்டினர் ஏற்றி வைத்த முதல் தீபத்தைப் போல் அழகுடையவளாய் என்பது பொருள்.
”கார்த்திகை விளக்கிட்டனன்” என்று மலையில் தீபம் ஏற்றுவதை சீவக சிந்தாமணி குறிப்பிடுகிறது.
தொல்காப்பியம் ”வேலியின் நோக்கிய விளக்கு நிலையும்” என்று கார்த்திகையில் ஏற்றிய விளக்கு பற்றிக் கூறுகிறது.
தீப ஒளியின் மகிமையைப் பற்றி தொன்று தொட்டு வழக்கில் இருக்கும் கதைகள்:
1.முற்பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தி எலியாக பிறந்தார். தன்னை அறியாமலேயே, தினமும் விளக்கில் இருக்கும் எண்ணெயை குடித்து வரும்போது, திரி தூண்டி வந்தது. இதன் காரணமாக கர்ப்பக்கிரகத்தினுள் சர்வகாலமும் விளக்குப் பிரகாசமாக ஒளி நின்று விளங்கிற்று. அறியாமலே எலி செய்த புண்ணிய காரியத்தினால் அடுத்த பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறவியை அடைந்தது. இறைவன் மகாபலிக்கு முக்தி கொடுத்தபோது மகாபலியின் விருப்பப்படி, கார்த்திகை தீபம் எல்லா இடங்களிலும் சிறப்பாக நடைபெற இறைவன் திருவுளம் கொண்டான்.
2.ஒரு சமயம் பிரம்மாவும், திருமாலும் சிவபெருமானின் அடி, முடியைக் காணாது தோல்வியுற்றனர். ஆதி அந்தம் கடந்தவனை, முதலும் முடிவுற்றவனை இறுதியில் ஜோதிப் பிழம்பாக திருவண்ணாமலையில் கண்டு களித்தனர். அதுவே ”லிங்கோத்பவ மூர்த்தி” ஆகும். இதைப் பற்றி ரிக்வேதம், பாஸ்கரசங்கிதை, சரபஉபநிடதம் முதலிய நூல்களில் கூறப்பட்டிருக்கிறது.
3.கார்த்திகைப் பெளர்ணமியில் பார்வதிதேவி சிவபெருமானின் இடப்பாகம் அமர்ந்தாகவும், சிவசக்தி ஐக்கிய சொரூபமான அர்த்தநாரீஸ்வரராக அன்று இறைவன் காட்சி அளிக்கிறார்.
திருவண்ணாமலையைப் பற்றி… ……
திருவண்ணாமலை தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையிலிருந்து 187 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த நகரம் கடல் மட்டத்திலிருந்து 266 அடி உயரத்தில் உள்ளது. தெற்கேயுள்ள முக்கியமான சைவக் கோயில்களுள் இக்கோயிலும் ஒன்றாகும். பஞ்ச பூதத்தலங்களுள் அக்னித்தலமாகப் போற்றப்படுகிறது. மேலும், பூமியின் இருதய ஸ்தானமாகும். நினைத்தாலே முக்தி தரும். இம் மலைக்கோயிலில் அருணாச்சலேஸ்வரர்தான் பிரதான தெய்வம்.
இந்த மலையுகத்திற்கு யுகம் மாறுபட்டு வருவதாக “ஸ்கந்த புராணம்” வர்ணித்துள்ளது. முதல் யுகமாகிய கிருதயுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் மிகுந்த ஒளிவீசும் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல்மலையாகவும் திருவுருக்கொண்டு “அருணாசலம்” என்று திருப்பெயர் பெற்றது என்பர்.
இக்கோயில் ஜோதிர்லிங்கம் எனப்படும் லிங்கோத்பவர்க்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சோழர்கள், விஜயநகர மன்னன் மற்றும் தஞ்சாவூரின் நாயக்கர்கள் இக்கோயிலுக்கு நிறைய உதவிகள் புரிந்துள்ளனர்.
திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபம் பற்றி…. ……..
அண்ணாமலை தீபம்: சிவபெருமான் ஜோதிப்பிழம்பாய் நின்ற இடமே இன்று கார்த்திகைத் திருநாளில் தீபம் ஏற்றப்பட்டு அனைவராலும் வழிபடப்படுகிறது. 51/2 அடி உயரமும், 5 அடி அகலமும் கொண்ட மிகப் பெரிய உருண்டையான உலோக பாத்திரத்தில் (சுமார் 2000 லிட்டர் நெய் பிடிக்கும் அளவு ) இத்தீபம் ஏற்றப்படுகின்றது. 30 மீட்டர் காடாத் துணியும் 2 கிலோ கற்பூரமும் தேவைப்படுகிறது. இந்த ஜோதியின் ஒளி 35 கி.மீ தொலைவு வரை தெரியும்.
திருவண்ணாமலையில் அதிகாலை நான்கு மணிக்கு பரணி தீபம் முருகப்பெருமானுக்கு ஏற்றப்படுகிறது.
இன்றும் தீபதரிசனத்திற்கு முன்பு மலை அடிவாரத்திலுள்ள அண்ணாமலையார் சந்நிதியிலிருந்து அர்த்தநாரீஸ்வரர் புறப்பட்டு குதூகலத்துடன் வேகமாக ஓடி வந்து கொடிக்கம்பத்தைச் சுற்றிச் செல்வார். அவர் வந்து சென்ற உடன் வேட்டு சத்தத்துடன் மலை முகட்டில் தீப ஒளி சுடர்விடும் அதே சமயம் பஞ்சமூர்த்திகளுக்கும் தீபாராதனை காட்டப்படும். பஞ்சமூர்த்திகளும் தீப ஒளியை தரிசனம் செயவர்.
முருகப் பெருமானைக் கார்த்திகைப் பெண்கள் சீராட்டி வளர்த்தனர். அம்பிகை அருளால் முருகப்பெருமான் கார்த்திகேயனாக ஒருமுகக் கடவுளானார். இதன் காரணமாக ‘பரணி தீபம்’ கொண்டாடப்படுகிறது.
ஞானஒளியைத் தரும் இக்கார்த்திகை மாதத்தில், கந்தனின் கதையை விரிவாக உணர்த்தும் எங்களது வெளியீடான ” கந்த புராணம் ” மற்றும் மணியான பாடல்கள் அடங்கிய ” சைவத்திரு முறைகள் ” போன்ற புத்தகங்களைப் படித்து அண்ணாமலையானின் பரிபூரண அருளைப்பெறுவோமாக!
