ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை
Posted in Uncategorized on 12/24/2011 12:11 pm by Lifcoblogadmin24.12.11
கீழ்வானம் வெள்ளென் றெருமை சிறுவீடு,
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்,
போவான்போ கின்றரைப் போகாமல் காத்து, உன்னைக்
கூவுவான் வந்துநின்றோம், கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு,
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய,
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்,
ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய். 8.
25.12.11
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூமம் கமிழத் துயிலணைமேல் கண்வளரும்,
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்,
மாமீர்! அவளை யெழுப்பீரோ? உன்மகள்தான்,
ஊமையோ, அன்றிச் செவிடோ, அனந்தலோ,
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ,
மாமாயன் மாதவன் வைகுந்த னென்றென்று,
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய். 9.
26.12.11
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்,
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன், நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால், பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும்,
தோற்று முனக்கே பெருந்துயில்தான் தந்தானோ,
ஆற்ற அனந்த லுடையாய்! அருங்கலமே,
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய். 10
27.12.11
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து,
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்,
குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே,
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்,
சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்து, நின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே பேசாதே செலவப்பெண் டாட்டி, நீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய். 11
28.12.11
கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி,
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர,
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்,
பனித்தலை வீழநின் வாசல் கடைபற்றி,
சினத்தினால் தென்னிலங்ககைக் கோமானைச்செற்ற,
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்,
இனித்தா னெழுந்திரா யீதென்ன பேருறக்கம்,
அனைத்தில்லத் தாரு மறிந்தேலோ ரெம்பாவாய். 12
29.12.11
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா வரக்கனை,
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்,
பிள்ளக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார்,
வெள்ளி யெழுந்து வியாழ முழங்கிற்று,
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்,
குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே,
பள்ளிக் கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்,
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய். 13
30.12.11
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்,
செங்கழுநீர் வாழ்நெகிழ்ந் தாம்பல்வாய் கூம்பின காண்,
செங்கல் பொடிக்கூறை வெண்பால் தவத்தவர்,
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்,
எங்களை முன்ன மெழுப்புவான் வாய்பேசும்,
நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்,
சங்கொடு சக்கர மேந்தும் தடக்கையன்,
பங்கயக் கண்ணானைப் பாடலோ ரெம்பாவாய். 14
31.12.11
எல்லே! இளங்கிளியே! இன்ன முறங்குதியோ,
சில்லென் றழையேன்மின் நங்கைமீர்! போதர்கின்றேன்,
வல்லையுன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்,
வல்லீர்கள் நீங்களே நானேதா னாயிடுக,
ஒல்லைநீ போதா யுனக்கென்ன வேறுடையை,
எல்லாரும் போந்தாரோ போந்தார்போந் தெண்ணிக்கொள்,
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய். 15.
