ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை
Posted in Uncategorized on 01/02/2012 01:14 pm by Lifcoblogadmin01.01.2012
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில்காப் பானே, கொடித்தோன்றும் தோரண
வாயில்காப் பானே, மணிக்கதவம் தாள்திறவாய்,
ஆயர் சிறுமிய ரோமுக்கு, அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்,
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்,
வாயால்முன்னமுன்னம் மாற்றாதே யம்மா, நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய். 16.
02.01.2012
அம்பரமே தண்ணீரே சோறே யறஞ்செய்யும்,
எம்பெருமான் நந்தகோ பாலா! எழுந்திராய்,
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே,
எம்பெரு மாட்டி யசோதாய்! அறிவுறாய்,
அம்பர மூடறுத் தோங்கி யுலகளந்த,
உம்பர்கோ மானே! உறங்கா தெழுந்திராய்,
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா,
உம்பியும் நீயு முறங்கேலோ ரெம்பாவாய். 17
03.01.2012
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்,
நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்,
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்,
வந்தெங்கும் கோழி! யழைத்தனகாண், மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்,
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட,
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப,
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். 18.
04.01.2012
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்,
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி,
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்,
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்,
மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை,
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய்காண்,
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்,
தத்துவ மன்று தகவேலோ ரெம்பாவாய். 19.
05.01.2012
முப்பத்து மூவ ரமரர்க்கு முன்சென்று,
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்
செப்ப முடையாய்! திறலுடையாய், செற்றார்க்கு
வெப்பங் கொடுக்கும் விமலா! துயிலெழாய்,
செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்,
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்,
உக்குமும் தட்டொளியும் தந்துன் மணாளனை,
இப்போதே யெம்மைநீ ராட்டேலோ ரெம்பாவாய். 20
06.01.2012
ஏற்ற கலங்க ளெதிர்பொங்கி மீதளிப்ப,
மாற்றாதே பால் சொரியும் வளளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்,
ஊற்ற முடையாய்! பெரியாய், உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்,
மாற்றா ருனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்,
ஆற்றாது வந்துன் னடிபணியு மாபோலே,
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய். 21
07.01.2012
அங்கண்மா ஞாலத் தரசர், அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே,
சங்க மிருப்பார்போல் வந்து தலைபெய்தோம்,
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே,
செங்கண் சிறுச்சிறிதே யெம்மேல் விழியாவோ,
திங்களு மாதித் தியனு மெழுந்தாற்போல்
அங்க னிரண்டுங்கொண் டெங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாப மிழிந்தேலோ ரெம்பாவாய். 22
08.01.2012
மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்,
சீரிய சிங்க மறிவுற்றுத் தீவிழித்து,
வேரி மயிர்பொங்ட எப்பாடும் பேர்ந்துதறி,
மூரி நிமிர்ந்து முழங்டிப் புறப்பட்டு,
போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணா, உன்
கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து, யாம்வந்த
காரிய மாராய்ந் தருளேலோ ரெம்பாவாய். ** 23.
09.1.2012
அன்றிவ் வுலக மளந்தா யடிபோற்றி,
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி,
பொன்றச் சகட முதைத்தாய் புகழ்போற்றி,
கன்று குணிலா வெறிந்தாய் கழல்போற்றி,
குன்று குடையா வெடுத்தாய் குணம்போற்றி,
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி,
என்றென்றுன் சேவகமே யேத்திப் பறைகொள்வான்,
இன்றுயாம் வந்தோ மிரங்கேலோ ரெம்பாவாய். ** 24.
10.01.2012
ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓரிரவில்
ஒருத்தி மகனா யொளித்து வளர,
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த,
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்,
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை,
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்,
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி,
வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். 25.
11.01.2012
மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான்,
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்,
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன,
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே,
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே,
சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே,
கோல விளக்கே கொடியே விதானமே,
ஆலி னிலையாய்! அருளேலோ ரெம்பாவாய். 26.
12.01.2012
கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா,உன்றன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்,
நாடு புகழும் பரிசினால் நன்றாக,
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே,
பாடகமே யென்றனைய பல்கனும் யாமணிவோம்,
ஆடை யுடுப்போ மதன்பின்னே பாற்சோறு,
மூடநெய் பெய்து முழங்கை வழிவார,
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய். ** 27
13.01.2012
கறைவைகள் பின்சென்று கானஞ்சேர்ந் துண்போம்,
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து, உன்றன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்,
குறைவொன்று மில்லாத கோவிந்தா, உன்றன்னோ
டுறவேல் நமக்கிங் கொழிக்க வொழியாது,
அறியாத பிள்ளைகளோ மன்பினால், உன்றன்னைச்
சிறுபே ரழைத்தனவும் சீறி யருளாதே,
இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய். ** 28
14.01.2012
சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து, உன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள்கேளாய்,
பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து, நீ
குற்றேவ லெங்களைக் கொள்ளாமற் போகாது,
இற்றைப் பறைகொள்வா னன்றுகாண் கோவிந்தா,
எற்றைக்கு மேழேழ் பிறவிக்கும், உன்றன்னோ
டுற்றோமே யாவோ முனக்கேநா மாட்செய்வோம்,
மற்றைநங் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய். ** 29
15.01.2012
வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை,
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை, அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன,
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே,
இங்கிப் பரிசுரைப்பா ரீரிரண்டு மால்வரைத்தோள்,
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்,
எங்கும் திருவருள்பெற் றின்புறுவ ரெம்பாவாய். ** 30.
——————————————————-
