லிப்கோ நூல் வெளியீட்டு விழா
Posted in Editor's Desk, Events on 05/09/2012 02:21 pm by Lifcoblogadmin
அண்மையில் லிப்கோ நிறுவனம், “LYRICAL JOURNEY- பாவ ஸாகித்ய ஸாரம்” என்னும் தலைப்பில், இசை/ நாட்டியம் பற்றிய அற்புதமான நூலை, சென்னை-மைலாப்பூரில் வெளியிட்டது. நூலாசிரியர் ஸ்ரீமதி வித்யா சரண்யன் அவர்கள், பாரதியார் பாடல்கள், காவடிசிந்து போன்ற 30 அருமையான தமிழ்ப் பாடல்களை பதம், ஸ்வரமுடன், ஆங்கிலமொழி பெயர்ப்புடன் தொகுத்து வழங்கியுள்ளார்.
மூத்த நடன கலைஞர் ஸ்ரீமதி நந்தினி ரமணி அவர்களின் மேற்பார்வையில், ஸ்ரீமதி வித்யா சரண்யன் இந்நூலைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்பு, மற்றும் பதவுரையுடன் விவரித்துள்ளார். பேராசிரியர், இசை கலைஞர், திரு.பி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், பாடல்களின் வரிகளை ஸ்வரப்படுத்தியுள்ளது இந்நூலின் சிறப்பு அம்சமாகும்.
“யாகுந்தேந்து” என்னும் ஸரஸ்வதி ஸ்லோகத்துடன் நிகழ்ச்சி இனிதே துவங்கியது. லிப்கோ நிறுவனத்தின் மேலாளர் திரு. தி.ந.ச. வீரராகவன், 1929 ல் துவங்கி இன்றுவரை கம்பெனியின் 83 ஆண்டு கால வரலாற்றையும் வளர்ச்சியையும் பற்றி விவரித்தார். விழாவின் சிறப்புத் தலைவர் டாக்டர். திருமதி பத்மா சுப்ரமணியம் அவர்கள், உலகளவில் பிரபலமாகியுள்ள பரத கலையைப் பயிலும் பரதக் கலைஞர்கள், பாடல்வரிகளின் உள்ளார்ந்த அர்த்தங்களைப் புரிந்து அனுபவித்து வெளிப்படுத்துதல் அவசியம் என்றும், இந்நூலில், பாடல்வரிகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு விளக்கம் இடம்பெற்றிருப்பது சிறப்பு என்றும் புகழ்ந்தார். இந்நூலின் முதற் பிரதியைப் பெற்றுக்கொண்ட மூத்த இசை அறிஞர் டாக்டர் திருமதி. ரீடா ராஜன் மற்றும் பரதக் கலைஞர் திருமதி. நர்த்தகி நடராஜன் பேசுகையில், அரிய பொக்கிஷங்களான அழகிய தமிழ்ப் பாடல்களை இவ்வாறு ஆங்கில அர்த்தங்களுடன் நூல் வடிவில் மேன்மேலும் லிப்கோ நிறுவனம் வெளிக்கொணர்ந்தால் பாடல்கள் பிரபலமாகும்” என்றும் கூறினார். ஸ்ரீமதி நந்தினி ரமணி மற்றும் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பேசுகையில், நூலாசிரியர் ஸ்ரீமதி வித்யா சரண்யன், இந்நூலின் வடிவமைப்பில் எடுத்துக்கொண்ட சீரிய முயற்சியை விவரித்து வியந்தனர்.
இந்நூல் வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து பிரபல பரதக் கலைஞர்கள் திருமதி ஸ்ரீகலா பரத், திருமதி ரோஜா கண்ணன், திருமதி ப்ரியாமுர்ளி மற்றும் திருமதி சுஷாமா ரங்கநாதன் அவர்களின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீமதி நந்தினி ரமணியின் நாட்டிய அமைப்பில், இந்நூலில் உள்ள பாடல்களிலிருந்து, ”வேலவரே”, ”இதைவிட”, ”இன்னும்பராமுகம்”, ”வடவரையை” ஆகிய பாடல்களை தனித் தனியாகவும், ”புள்ளி கலாப மயில்” என்ற காவடிச் சிந்துவை, மேற்படிநால்வரும் சேர்ந்து இறுதி நிகழ்வாகவும் நடனமாடியது விழாவை மேலும் மெருகூட்டியது. இந்நிகழ்ச்சியை நன்றியுரையுடன், திரு சரண்யன் இனிதே நிறைவு செய்தார்.
மேற்படி நூல் ஜூன் முதல் வாரத்திலிருந்து விற்பனைக்குக் கிடைக்கும். விவரங்களுக்கு தொலைபேசி: 24341538

