Archive for the ‘Editor's Desk’ Category

கோகுலாஷ்டமி

krishna0002 அவதாரங்களுள் ஒருவரான “ஸ்ரீ க்ருஷ்ண பகவானின் ஜென்மாஷ்டமி வரும் வியாழக்கிழமையன்று  இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில்        சிறப்பாகக் கொண்டாடப்பட      விருக்கின்றது. அன்றுமக்கள் இனிப்புகள்,  காரங்கள் செய்து குறிப்பாக சீடை வகைகள பல செய்து   கண்ணனுக்கு   நிவேதனம்    செய்து மகிழ்வர்.  அரிசி மாவினால் கண்ணனின் காலடிகளை இட்டு  கோபாலனை தத்தம் இல்லங்களுக்குப் பெண்டிர் அழைப்பர்.அன்று பல கோயில்களில் “உறியடி” திருவிழா நடைபெறும்.

மங்களகரமான இந்நாட்களில், ஜகத்தில் உள்ள பக்தர்களுக்கு(மக்கள் அனைவருக்கும்) நீண்ட ஆயுளையும் த்ருடகாத்ர ஆரோக்யத்தையும்
எல்லா ஸெளக்யங்களையும் ஸ்ரீ க்ருஷ்ண பரமாத்மா அருள நாம் அவரை கீத கோவிந்தம்”,”ஸ்ரீமந் நாராயணீயம்”,
“ஸ்ரீ க்ருஷ்ண கர்ணாம்ருதம் போன்ற பல ஸ்தோத்ரங்களால் துதித்து வணங்குவோம்.

“ஆயர்பாடி கண்ணனை ஆராதிப்போம்!

ஆனந்தம் அடைந்து மகிழ்வோம்! “

 

ஆடியின் அற்புதங்கள்

kamakshiimage
இந்துக்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு, ஆடி மாதம் வந்தாலே பண்டிகைகளின் அணிவகுப்பு ஆரம்பமாகிவிடும்.ஆடி மாதப் பிறப்பு முதல் ,தை மாதம் மகர சங்கராந்தி வரை,பலவித வழிபாடுகளிலும், கொண்டாட்டங்களிலும் மக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கமாகும்.

ஆடி மாதத்தை பல தெய்வங்களுடன் தொடர்பு படுத்தி நம் முன்னோர்கள் பல விரதங்களை மேற்கொண்டு வழி பட்டு வந்தனர்.(அம்மன் வழிபாடு, ஆடிப்பூரம், ஆடிஅமாவாசை, ஆடிக்கிருத்திகை) நாமும் அவர்களை போல் பெருமை வாய்ந்த ஆடி மாதத்தில் இறைவனைத் துதித்து மகிழ்வோமாக!

நன்றே சொல்வோம்!
நன்றே செய்வோம்!

- Vasudha Murali.

ஆடியின் பெருமைகளும் வழிபாடுகளும்

ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாக நம் முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். ஆடி முதல் மார்கழி முடிய தட்சிணாயனம். இது தேவர்களுக்கு இரவாகும். தை முதல் ஆனி முடிய உத்தராயணம். இது தேவர்களுக்கு பகலாகும்.

ஆடிப் பதினெட்டு:

ஆடிமாதமே, தேவர்களின் மாலைக்காலம் (6 மணி முதல்– 8 மணி வரை) இந்த மாலை நேரத்தில் அனைத்து உயிருக்கும் அன்னையான அம்பிகையைத் துதித்து, அவள் அருளை வேண்டுகிறது மனித இனம். ஆடி மாதத்தில் தான் பூமாதேவி அவதரித்தாள். பூமியில் வாழும் நமக்கு, மழை இல்லா விட்டால் எதுவும் நடக்காது! மழையே நீ பொழிவாய்!” என்று வேண்டுகிறது.

மனிதகுலம் அந்த வேண்டுதலின்படி, அன்னையின் அருள் மழையாகப் பொழிந்து, வெள்ளமாக ஓடியது. அதற்கு நன்றி செலுத்தும் வகையில் ‘ஆடிப் பதினெட்டு ‘ என்று கொண்டாடுகிறார்கள்.

பதினெட்டு என்ற எண் ‘ஜய’ த்தை அதாவது வெற்றியைக் குறிக்கும். மஹாபாரதத்தில் 18 பர்வங்கள், பகவத் கீதையில் 18 அத்தியாயங்கள், சபரிமலையில் 18 படிகள், நதிக்கரைகளில் 18 படிகள் முதலானவை எல்லாம் இந்த அடிப்படையிலேயே அமைந்தன. எனவேதான், காவிரி அன்னைக்கு ‘ஆடிப் பதினெட்டு’அன்று நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடுகின்றனர்.

ஏகாதசி:

ஆடிமாதத்தில் அம்மன் கோயில்களில் குறிப்பாக மாரியம்மன் கோயில்களில் வேப்பஞ்சேலை அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவது, தீமிதிப்பது, கூழ் வார்த்தல் போன்ற விசேஷமான வழிபாடுகள் நடைபெறுகிறது. ஆடிமாதத்தில் தேய்பிறை ஏகாதசி – யோகிநி ஏகாதசி. வளர்பிறை ஏகாதசி – சயிநி ஏகாதசி. ஆடிஅமாவாசை தினத்தில் பித்ருக்களுக்கு (முன்னோர்களுக்கு) ச்ரார்த்தம் செய்வது மிகவும் நல்லது.

சூரியன் திசைமாறி சஞ்சரிக்கும் ஆரம்ப காலம் ஆடிமாதம். ஆகையால் ஆடி அமாவாசை தர்பணத்திற்கு மிகவும் உயர்ந்தகாலம். இதனால், பித்ருக்கள் மகிழ்ந்து நமக்கு சகல செல்வத்தையும் வழங்குவார்கள்.

குபேரனின் புஷ்ப கைங்கர்யம் செய்யும் பணியாளனான ஹேமமாலி என்பவன் தனது அழகான மனைவி மீது கொண்ட மையலால், வழக்கமான தனது பணியை மறந்து போனதால், குபேரனால் சபிக்கப்பட்டு குஷ்டரோக நோய் வந்து அவதியுற்றான். அப்போது ஆடிமாத தேய்பிறையில் வரும் யோகிநீ ஏகாதசி அன்று விரதம் இருந்து, நோயிலிருந்து விடுபட்டான். பிறகு குபேரனிடம் சென்று தன் பணியைத் தொடர்ந்தான். இதுவே யோகிநீ ஏகாதசி எனப்பட்டது.

திரிவிக்ரமனாகத் தோன்றி மஹாபலியின் கர்வத்தை அடக்கிய மஹாவிஷ்ணு அவனைப் பாதாளத்துக்கு அனுப்பியவுடன் திருப்பாற்கடலுக்குச் சென்று பாம்பணையில், ஆடிமாத வளர்பிறை ஏகாதசியில்தான் சயனித்தார். எனவே, இது சயநீ ஏகாதசி எனப்பட்டது.

ஆடிப்பூரம் :

கோயில்களில் ஆடிப்பூர உத்ஸவம் விசேஷமாக நடைபெறும். குறிப்பாக சூடிக்கொடுத்த சுடர்கொடி ஆண்டாளுக்கு ஆடிப்பூரத் திருவிழா விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

ஆடிமாத வள்ர்பிறை துவாதசி தொடங்கி, கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி வரையில் துளசியை வழிபட்டால் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், செல்வம் பெருகி, வாழ்க்கை வளமாகும்.

ஆடியும் ஆறுமுகனும்…

கலியுக வரதனாம் கந்த பெருமானுக்கு பல விரதங்கள் உண்டு. இருப்பினும், தட்சிணாயனம் தொடங்கும் ஆடிமாதத்தில் வரும்
கார்த்திகை விரதமும், உத்தராயணம் தொடங்கும் தை மாதத்தில்
வரும் கார்த்திகையும் பெரும் சிறப்புடையன.

கந்தனுக்கு பாலூட்டி வளர்த்த ஆறு கார்த்திகை பெண்களிடம், சிவபெருமான் “கார்த்திகை விரதம் இருக்கும் அனைவரின் குறைகளை எல்லாம் போக்கி, நல் வாழ்வு அளித்து, இறுதியில் முக்தியும் கொடுப்பேன் என்று வரமளித்தார்.”

எனவே தான் ஆடி மாதக் கார்த்திகையில் முருகப் பெருமானுக்கு விரதம் இருப்பது விசேஷமாகக் கருதப் படுகிறது.

 

அளவிலாப் பலன்களைத் தரும் அக்ஷய த்ரிதியை

iswarya_lakshmi_2

‘க்ஷயம்’ என்றால் தேய்ந்து போதல் அல்லது குறைந்து போதல் என்று அர்த்தம். ‘அக்ஷயம்’ என்றால் அழிவின்றி வளர்வது, பூரணமானது, குறையாதது, அழியாத பலன் தரும் என்று பொருள்.

சித்திரை மாதம் அமாவாஸையை அடுத்துவரும் மூன்றாம் பிறை நாளான த்ரிதியை தினத்தில்தான்,கிருதயுகத்தை பிரமன் படைத்ததாகச் சொல்லுகிறது பவிஷ்ய புராணம். ஒரு யுகம் முடிந்து மறுயுகம் தொடங்கும் நாளை ‘யுகாதி’ என்பர். அந்த வகையில் அக்ஷ்ய த்ரிதியை தினமும் காதிதான். ‘மாலோடு’ ‘திரு’ சேர்ந்து, மஹாவிஷ்ணு ‘திருமால்’ ஆன தினம் என்பதால், திரிதியை திதி, பொதுவாகவே லக்ஷ்மி கடாட்சம் நிறைந்தது. எனவேதான் அன்று பொன்னும் பொருளும் வாங்கி சேர்த்தால் எந்தவிதக் குறையுமின்றி அந்த ஆண்டு முழுவதும் இல்லத்தில் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம். அட்சய த்ரிதியையன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு, பூஜை அறையில் கோலமிடுங்கள். மகாலக்ஷ்மி, மஹாவிஷ்ணு இருவரும் சேர்ந்தபடம் இருப்பின், விளக்கேற்றி பக்தியோடு பூஜை செய்து, தூப, தீபம் காட்டி, காய்ச்சிய பால், பழம் நிவேதனம் செய்து திருமாலை வழிபடுங்கள்.

இல்லத்தில் செய்யும் பூஜைத்தவிர அன்றையதினத்தில், நாம் வழங்கும் தானத்தால் புண்ணிய பலன்களை வளரச் செய்யலாம் என்கிறது புராணம். அதோடு, அன்றைய தினம் பித்ருக்களுக்காக தர்ப்பணம் அளித்தால் முன்னோர்களின் ஆசியைப் பெற்று, வறுமை நீங்கி வளம் பெறலாம். ஆயினும், பொன்னும் மணியும் வாங்கிக்குவிக்கக் குறியாயிராமல், த்ரிதியை நன்நாளில் நம்மிடம் இருப்பதிலிருந்து சிறிதேனும் வறியோர்க்கு தானமளித்தாலே லக்ஷ்மி நாராயணின் ஆசியையும் அவரது பரிபூரண அருளையும் அட்சயமாய் பெறலாம் என்பதில் ஐயமேதுமில்லை!

மகத்துவம் மிகுந்த அக்ஷ்ய த்ரிதியை நாளில் எந்த ஒரு செயலைத் துவங்கினாலும் பொன்னும்,வெள்ளியும், பொருளும் வாங்கினாலும் அவை மேன்மேலும் வளர்ந்து வளமை தரும் என்பது தொன்று தொட்டு நம்மிடையே இருந்து வரும் நம்பிக்கை. இந்த நம்பிக்கை வளர காரணமாயிருப்பது பல புராணங்களில் நிகழ்ந்துள்ள சம்பவங்களும், ஆச்சரியமூட்டும் நிகழ்வுகளும்தான். அவற்றில் சில……….

1. திருமகளின் எட்டு அவதாரங்களுள் ஐஸ்வர்ய லக்ஷ்மி மற்றும் தான்ய லக்ஷ்மி தோன்றியது இந்தத் திருநாளில்தான்.

2. இந்த புண்ணிய நாளில் தான் தசாவதாரங்களுள் ஒன்றான பரசுராம அவதாரம் நிகழ்ந்தது.

3. மஹோதயம் எனும் நகரில், வணிகன் ஒருவன் அட்சய த்ரிதியை தினத்தின் மகிமையைக் கேள்வியுற்று, அந்நாளில் கங்கையில் நீராடிவிட்டு, பித்ருத் தர்ப்பணம் செய்வதுடன், கோதானம், சுவர்ணதானம், பூமிதானம் போன்றவற்றைச் செய்து, மறுபிறவியில் ‘குசாவதி’ நாட்டின் அரசனானதும் த்ரிதியை தினத்தின் மகத்துவத்தை உணர்த்தும் ஒருகதைதான். எனவே இந்த தினத்தில் விசிறி, குடை, சுவர்ணம் ஆகியவற்றை தானம் செய்வது அழியாப்பலனைத்தரும் என்பது விசேஷம்.

4. மஹாபாரதக்கதையில், கெளரவர் சபையிலே கெளரவம் பறிபோய் அவமானம் நேர்ந்துவிட்ட அச்சத்தில், அவலக்குரலில்அபயம்! அபயம்! என்று அலறினாள் திரெளபதி இருந்த இடத்திலிருந்தே ‘அக்ஷ்யம்’ என்றார் கண்ணன். குறையாமல்வளர்ந்தது திரெளபதியின் சேலை.காக்கப்பட்டது பாஞ்சாலின் கற்பு, இது நிகழ்ந்ததும் ஒரு த்ரிதியை தினத்தில்தான்.

5. பாற்கடல் கடையப்பட்டபோது, அமுதத்தோடு அவதரித்த மலைமகள், ‘அகலுமில்லேன்’ என்று மாலவன் மார்பில் நிலையான இடம் பிடித்தது த்ரிதியை திதி நாளில்தான்.

6. மஹாலக்ஷ்மியின் பார்வை பட்டதால் பிறை நிலவாகப் பிறந்த சந்திரன், அட்சயமாகப் பெருகி வளர்ந்த முழுமதியாகப்பிரகாசித்தவன் ஒருசமயம், மதிகெட்ட செயலால், சாபம் பெற்று (க்ஷயரோகம்) அவன் உடல் தேய்ந்தபோது, அபயம் என்று இறைவனைத் தஞ்சமடைந்து, சாப விமோசனமாக அக்ஷயவரம் பெற்றதும் இந்த த்ரிதியை தினத்தன்றுதான்.

7. ஈஸ்வரன் பிட்சாடனர் திருக்கோலத்தில் வந்து காசியில் அன்னபூரணியான அம்பிகையிடம் பிட்சை பெற்ற பின்தங்கத்திலான அட்சய பாத்திரத்திலிருந்து ஸ்வர்ணகரண்டியால் உணவை கொடுத்து, அகிலாண்டநாயகி உலகுக்கு அன்னம் வழங்கத் தொடங்கியதும் இத்திருநாளில்தான்.

8. சகோதரன் ராவணனால் விரட்டப்பட்டு, வறுமையில் வாடிய குபேரன், ஈடற்ற தவத்தால், ஈஸ்வரனின் ஆக்ஞைப்படி, திருமகளை வழிபட்டு சங்கநிதி, பதுமநிதி என்ற ஐஸ்வர்ய கலசங்களைப் பெற்ற நாளும் அட்சய த்ரிதியை நாளன்றுதான்.

9. வனவாசத்தின்போது கடும் தவம் செய்த தர்மரின் முன்னால் காட்சி தந்த சூரியபகவான், ‘அன்னவளம் குன்றாத’ அட்சயப்பாத்திரத்தை அவருக்கு அளித்ததும் இந்த நாளில்தான்.

10. ஏழ்மை என்பதற்கே எடுத்துக்காட்டாக இருந்த குசேலர், கண்ணன் கூறிய ‘அக்ஷ்யம்’ என்ற சொல்லால் குபேரவாழ்வு பெற்றதும் த்ரிதியை தினம் ஒன்றில்தான்.

11. தமிழ் வருடங்களான அறுபது வருடங்கள். ‘பிரபவ’ என த்தொடங்கி, ‘அக்ஷய’ என்று நிறைவடையும். ‘அக்ஷய’ வில் முடியக்காரணம் காலத்திற்கு முடிவில்லை; அக்ஷயமாய் அவை வளர்ந்து அடுத்த சுழற்சி ஆரம்பமாகும் என்று உணர்ததவே தான்.

Inputs from
‘நவரத்னமாலா’ ஸ்ரீ எம்.கே. வெங்கடராமன்
‘குமுதம்’ பக்தி.
‘சக்தி’ விகடன்

 

இனிய விக்ருதி புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

puthaantu
இந்தியாவில் க்ரக்கேரியன் (Gregorian) காலண்டருடன், இந்து பஞ்சாங்கமும் அனேக விசேஷங்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இப்பஞ்சாங்கப்படி,ஏப்ரல் மாதத்தின் நடுவில் 13, 14 ந்தேதியில் வருவதே சித்திரை வருடப் பிறப்பு. சித்திரை மாதம்  தொடங்கியே 12 மாதங்களை வரிசையாகக் கணக்கிடுகின்றனர் தமிழர்கள். இந்துக்கள் குறிப்பாக தமிழர்கள் அன்றைய தினம் வீட்டை சுத்தப்படுத்தி, அலங்கரித்து, வண்ணக்கோலமிட்டு,வாயிலில் மாவிலைத் தோரணம் கட்டிக் கொண்டாடுவர். புத்தாடைகள் உடுத்தி, பெரியோர்களிடம் ஆசி பெற்று மகிழ்வர். மேலும், மாங்காய்ப் பச்சடி செய்து வடை,பருப்பு பாயஸத்துடன் உண்டு மகிழ்வர். வாழ்வில் இனிப்பும், கசப்பும் மாறி மாறி வரும், அதனைத் துணிவோடு எதிர்கொண்டு ஜெயிக்கவேண்டும் என்பதனை உணர்த்தவே இந்த ‘மாங்காய்ப் பச்சடி” வழக்கம் என்பர் பெரியோர்.(வெல்லம், மாங்காய், வேப்பம்பூ சேர்த்துச் செய்யும் ஒருவகை இனிப்பு.

இவ்வினிய புத்தாண்டில் கனவுகள் நினைவாகி வாழ்வு மேம்பட “லிப்கோ” வின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். —-Read more

சித்திரை மாதத்தில் தமிழ்நாட்டில் எல்லா ஆலயங்களிலும் 10-12 நாட்களுக்கு கோலாகலத் திருவிழா நடைபெறுகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயில், சங்கரன் கோயில் சித்திரைத் திருவிழாவும் பிரஸித்தி பெற்றதாகும். மஹாபுருஷர்கள் ஆதிசங்கரரும் ராமானுஜரும் அவதரித்த மாதமும் சித்திரையே.

சித்திரை வருடப்பிறப்பு கேரள மக்களால் “விஷு” என்று கொண்டாடப்படுகிறது. “மங்களத்திண்ட ப்ரதீஷ” என்று இதனை அழைக்கின்றனர்.

விஷுவிற்கு முதல் நாள் இரவே ஒரு பெரிய தாம்பாளத்தில் அரிசியைப் பரப்பி அதில் பொன் நகைகளையும், நவதானியம், பழங்கள்,வெற்றிலைப் பாக்கு, தேங்காய், மாவிலைக்கொத்து, பலகாரங்கள் ஆகியவற்றை அழகாய் அலங்கரித்து பூஜையறையில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியையும் வைத்து விடுவர்.

விஷூ நாளில் பொழுது விடியும் முன்பாக கண் திறவாமல், முதல் நாள் அலங்கரித்து வைத்த தட்டில் உள்ள பொருட்களை கண்ணாடி மூலமாகக் கண்டுவிட்டுத்தான் முகம் விழிப்பர். இதனை விஷுக்கனி காணுதல் என்பர். சுபமான, மங்கலகரமான பொருட்களைக் கண்டு அந்த ஆண்டைத் துவக்குதால், கனவுகள் நிறைவேறி, இவ்வருடம் இனிதாய் கழியும் என்பதே இவ்வழக்கத்தின் அடிப்படை நம்பிக்கை. (ஆனால், தமிழக அரசு  தை மாதமே ஆண்டின் முதல் மாதம் என்றும், பொங்கல் திருநாளே புத்தாண்டு எனவும் அறிவித்துள்ளது.)

 

காரடையான் நோன்பு

ஸ்ரீ காஞ்சி காமாட்சி – காஞ்சிபுரம்

காரடையான் நோன்பை தென்னாட்டில் சாவித்திரி நோன்பு ,காமாக்ஷி விரதம் என்றும் அழைப்பர். வழக்கமாக தமிழ் மாதங்களான மாசி பங்குனி மாதங்கள் கூடும் வேளையில் வரும். ‘மாங்கல்ய பலம் விரதம் என்றும் சொல்லப்படுகிறது.

நோன்பு பற்றிய கதைகள் :
காமாக்ஷி அம்மன், நதிக்கரையில் ஆற்று மணலில் சிவலிங்கம் பிடித்துவைத்து பூஜை செய்கையில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. மணலில் பிடித்த சிவலிங்கம் கரைந்து போகாமல் காக்கவே காரடையான் நோன்பு விரதம் இருந்ததாகவும், சிவபெருமான் பிரத்யக்ஷமாகி காமாக்ஷியை மணந்து கொண்டதாகவும் கதை சொல்லப்படுகிறது.

ராஜகுமாரி, சாவித்திரி தன் மனதிற்கு இசைந்த கணவன் சத்தியவானை மணந்து காட்டில் வாழ்ந்து வந்தனர். கல்யாணம் முடிந்து ஒரு வருடத்தில் கணவனை, இழக்க நேரிடும் என்று அறிந்திருந்தாள். அதேபோல் மரம் வெட்டச்சென்ற சத்தியவான் உயிர் இழக்க, பதிவிரதை சாவித்திரி யமனை பின் தொடர்ந்துசென்று, தங்களுக்கு நூறு குழந்தைகள் பிறக்க வரம் கேட்டு, யமதர்ம ராஜனும் வரம் கொடுக்க இறந்த கணவனுக்கு உயிர் கொடுக்கச் செய்து, மீட்டு வந்ததாகக் கதை சொல்லப்படுகிறது.

பூஜை செய்யும் முறை:

இதர பண்டிகைகளுக்கு செய்வதுபோல், வீட்டின் வாயில் நிலையிலும், ஸ்வாமி அறை நிலையிலும் மாவிலைத்தோரணம் கட்ட வேண்டும்.பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட்டு ஸ்வாமி படங்களுக்கு பூ சாற்றி, வெற்றிலைபாக்கு, மஞ்சள், வாழைப்பழம், தேங்காய் வகையறாக்களை வழக்கம் போல் ஒரு தட்டில் ( மரத்தட்டு இருந்தால் விசேஷம்) வைக்க வேண்டும். மஞ்சள் சரடு கட்டிக் கொள்வதற்கு முன்பு அதில் ஒரு சிறிய பசு மஞ்சளை துளையிட்டுக் கோர்த்துக் கட்டியோ அல்லது புஷ்பம் கட்டியோ வைக்கவேண்டும்.

பலா இலை அல்லது வாழை இலையில் பிரசாதம் வைக்க வேண்டும் “ நோன்பு அடை” முக்கியம். “நோன்பு அடை” அல்லது கொழுக்கட்டை வழக்கம் இல்லாத குடும்பத்தவர்கள் வெற்றிலை பாக்குடன் கேசரி போன்ற ஏதேனும் ஒரு இனிப்பை செய்தும், ஸ்வாமிக்கு நிவேதனம்  செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஒரு வெல்ல அடை, சிறிது வெண்ணை இலையில் வைத்து, நோன்பு சரடை அம்மனுக்கு சாற்றி, துளசிச் செடியில் ஒன்று கட்டி, தங்கள் கழுத்திலும் கட்டிக்கொள்வார்கள். உருகாத வெண்ணையும், ஓரடையும் நான் வைத்தேன் ஒரு நாளும் என் கணவர் பிரியாத வரம் தருவாய் ” என்று அம்பாளை நினைத்து வேண்டிக்கொண்டு அம்பாள் ஸ்லோகம் சொல்வார்கள்.

மொத்தத்தில் பெண்டிர் அனைவரும் தம் தம் கணவருக்காக சிரத்தையாக செய்யும் விரதமே – காரடையான் நோன்பு.

 

கார்த்திகைத் தீபத்திருவிழா

KarthigaiDeepam‘கார்த்திகை தீபம்’ மூன்று நாட்கள்  தீபத்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. தவிர, இம்மாதம் முழுவதும் தமிழகமெங்கும்  இல்லங்களில்  தீபங்களை ஏற்றி வைக்கும் நேர்த்தியான காட்சியை இன்றும் நாம் பார்க்கக்கூடும். அகல், எண்ணெய், திரி, சுடர் இவை நான்கும் ஒன்று சேரும்போது ‘விளக்கு’ என்று  அழைக்கப்படுகிறது. விளக்கின் ஐந்து முகங்களையும் பெண்களின் மன உறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிப்புத் தன்மை, அன்பு இவற்றிற்கு ஒப்பிடுவார்கள். அதனால் கார்த்திகை தீபத்தன்று அனைவரின் வீடுகளிலும் மாலையில் தீபமேற்றி  வழிபடுகிறார்கள்.

”அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – என்புருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ் புரிந்த நான் ”
என்று சொல்லி கார்த்திகை மாதத்தில் தினமும் மாலையில் விளக்கேற்றி வழிபட வேண்டும். இம்மாதத்ததில் ஒவ்வொரு சோமவாரத்தன்றும், தமிழக புராதன சிவாலயங்கள் யாவற்றிலும் அந்திப்பொழுதில் அதுவும் மகா பிரதோஷ காலத்தில் “நூற்றியெட்டு” சங்காபிஷேகம் இறைவனுக்குச் செய்யப்பட்டு வருவது வழக்கம்.

தீபம் ஏற்றி வழிபடமுடியாத இடங்களில் பனை ஒலையால் சொக்கப்பானை வேய்ந்து  சுவாமியை எழுந்தருளச் செய்து சொக்கப்பானைக் கொளுத்துவர்.

”சொக்கப்பானையை வணங் குவது சொக்கப்பனை வணங் குவது ஆகும்.” சொக்கப்பனாகிய சிவனை ஒளிவடிவாகக் காண்பிப்பதால் இது சொக்கப் பானை ஆகும்.

1. கார்த்திகை தீபவிழா ஆணவ இருளை நீக்கி, ஞான ஒளியை நம்முள் பெருக்க உகந்த விழாவாகும்.

கங்கைக்கு தீபம் ………
இன்றும் தினமும் காசியிலும், ஹரித்துவாரிலும் மாலையில் தீபம் ஏற்றி இலையில் வைத்து பூக்களுடன் ஆற்றில் விடும் பழக்கம் இருந்து வருகிறது. கங்கைக்கு தீபம் காட்டி வழிபடுவது இன்றும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

தஞ்சை மாவட்ட காவிரி தீரவாசிகள் சூரியன் நன்கு மறைந்த பின்னர் இம்மாதத்தில் “மந்தாரை இலை”யினால் செய்யப்பட்ட சிறிய ஓடத்தில் தீபம் ஏற்றி வைத்து, வடநாட்டினர் ஹரித்வாரத்தில் கங்கையில் சோதி வழிபாடு செய்வதை ஒக்க – காவிரியில் சமர்ப்பிக்கின்றனர். அத்தீப ஓடங்கள் ஒளிவீசிக் கொண்டு ஓடும் நதியில் மிதந்து போகும் அற்புதமான காட்சியைக் கண்ணுற்று மகிழ்ச்சி கடலில் மிதக்கிறார்கள்.

பண்டைய நூல்களில் – தீபம் பற்றியச் சிலக்குறிப்புகள்

சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற சங்க நூல்களில் பாவை விளக்குகள் பற்றி முக்கியமாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

”கார்த்திகை தீபக்காட்சிக் கண்டு களித்தவர்களின் கண்கள்தான் கண்கள். மற்றவர்களின் கண்கள் வெறும் புண்கள் ” என்று பொங்கையாழ்வார் கார்த்திகை தீபத்தைப் பற்றிச் சிறப்பாக
குறிப்பிடுகிறார்.

காளிதாசனின் ரகுவம்சத்தில் இந்துமதியின் அழகைப் பற்றி வர்ணிக்கையில், சுயம்வர மண்டபத்தில் இந்துமதி வரும் அழகு தீப ஒளி போன்று, அங்கு அமர்ந்திருக்கும் அரசிளங்குமாரர்களின் மீது பட்டு அவர்களது முகம் ஜொலிப்பதாகக் கூறியுள்ளார்.

திரிசங்கு மன்னன் இழந்த தன்னுடைய நாட்டைக் கார்த்திகை தீப விரதமிருந்து பெற்றான். மாணிக்கவாசகர், ”சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே” என்று சிவபெருமானைக் குறித்துப் பாடியுள்ளார். வள்ளலார் ‘ஒளியின் வடிவம் சிவம்’ என்று கருதி, அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடினார். அப்பர் பெருமான் ‘நமச்சிவாய’ மந்திரமே ஒளிமயமானது என்கிறார்.

ருக்வேதத்தில் இந்திரன் அடுத்தபடியாக அக்னிபகவான் முக்கிய இடம் பெறுகிறார்.

கீதையில் கிருஷ்ண பகவான், விளக்கின் ஒளி போன்று மனதை ஆடாமல், அசையாமல் சஞ்சலமற்று ஒரு நிலைப்படுத்த வேண்டும் என்கிறார்.

திருமூலரும் தீபவழிபாட்டை பற்றி திருமந்திரத்தில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்:

”விளக்கொளியாகிய மின் கொடியாளை
விளக்கொளியாக விளங்கிடு நீயே !
விளக்கிடு மெய்நின்ற ஞானப் பொருளை
விளங்கிடுவார்கள் விளங்கினர் தானே !
என்று சிறப்பித்துக் கூறுகிறார்.

”நலமிகு கார்த்திகை நாட்டவரிட்ட
தலைநாள் விளக்கில் தகைமை யுடைவளாகி…”
என்று கார்நாற்பது கூறுகிறது.

நன்மைமிக்க கார்த்திகை விழாவில் நாட்டினர் ஏற்றி வைத்த முதல் தீபத்தைப் போல் அழகுடையவளாய் என்பது பொருள்.

”கார்த்திகை விளக்கிட்டனன்” என்று மலையில் தீபம் ஏற்றுவதை சீவக சிந்தாமணி குறிப்பிடுகிறது.

தொல்காப்பியம் ”வேலியின் நோக்கிய விளக்கு நிலையும்” என்று கார்த்திகையில் ஏற்றிய விளக்கு பற்றிக் கூறுகிறது.

தீப ஒளியின் மகிமையைப் பற்றி தொன்று தொட்டு வழக்கில் இருக்கும் கதைகள்:

1.முற்பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தி எலியாக பிறந்தார். தன்னை அறியாமலேயே, தினமும் விளக்கில் இருக்கும் எண்ணெயை குடித்து வரும்போது, திரி தூண்டி வந்தது. இதன் காரணமாக கர்ப்பக்கிரகத்தினுள் சர்வகாலமும் விளக்குப் பிரகாசமாக ஒளி நின்று விளங்கிற்று. அறியாமலே எலி செய்த புண்ணிய காரியத்தினால் அடுத்த பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறவியை அடைந்தது. இறைவன் மகாபலிக்கு முக்தி கொடுத்தபோது மகாபலியின் விருப்பப்படி, கார்த்திகை தீபம் எல்லா இடங்களிலும் சிறப்பாக நடைபெற இறைவன் திருவுளம் கொண்டான்.

2.ஒரு சமயம் பிரம்மாவும், திருமாலும் சிவபெருமானின் அடி, முடியைக் காணாது தோல்வியுற்றனர். ஆதி அந்தம் கடந்தவனை, முதலும் முடிவுற்றவனை இறுதியில் ஜோதிப் பிழம்பாக திருவண்ணாமலையில் கண்டு களித்தனர். அதுவே ”லிங்கோத்பவ மூர்த்தி” ஆகும். இதைப் பற்றி ரிக்வேதம், பாஸ்கரசங்கிதை, சரபஉபநிடதம் முதலிய நூல்களில் கூறப்பட்டிருக்கிறது.

3.கார்த்திகைப் பெளர்ணமியில் பார்வதிதேவி சிவபெருமானின் இடப்பாகம் அமர்ந்தாகவும், சிவசக்தி ஐக்கிய சொரூபமான அர்த்தநாரீஸ்வரராக அன்று இறைவன் காட்சி அளிக்கிறார்.

திருவண்ணாமலையைப் பற்றி… ……

திருவண்ணாமலை தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையிலிருந்து 187 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த நகரம் கடல் மட்டத்திலிருந்து 266 அடி உயரத்தில் உள்ளது. தெற்கேயுள்ள முக்கியமான சைவக் கோயில்களுள் இக்கோயிலும் ஒன்றாகும். பஞ்ச பூதத்தலங்களுள் அக்னித்தலமாகப் போற்றப்படுகிறது. மேலும், பூமியின் இருதய ஸ்தானமாகும். நினைத்தாலே முக்தி தரும். இம் மலைக்கோயிலில் அருணாச்சலேஸ்வரர்தான் பிரதான தெய்வம்.

இந்த மலையுகத்திற்கு யுகம் மாறுபட்டு வருவதாக “ஸ்கந்த புராணம்” வர்ணித்துள்ளது. முதல் யுகமாகிய கிருதயுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் மிகுந்த ஒளிவீசும் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல்மலையாகவும் திருவுருக்கொண்டு “அருணாசலம்” என்று திருப்பெயர் பெற்றது என்பர்.

இக்கோயில் ஜோதிர்லிங்கம் எனப்படும் லிங்கோத்பவர்க்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சோழர்கள், விஜயநகர மன்னன் மற்றும் தஞ்சாவூரின் நாயக்கர்கள் இக்கோயிலுக்கு நிறைய உதவிகள் புரிந்துள்ளனர்.

திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபம் பற்றி…. ……..

அண்ணாமலை தீபம்: சிவபெருமான் ஜோதிப்பிழம்பாய் நின்ற இடமே இன்று கார்த்திகைத் திருநாளில் தீபம் ஏற்றப்பட்டு அனைவராலும் வழிபடப்படுகிறது. 51/2 அடி உயரமும், 5 அடி அகலமும் கொண்ட மிகப் பெரிய உருண்டையான உலோக பாத்திரத்தில் (சுமார் 2000 லிட்டர் நெய் பிடிக்கும் அளவு ) இத்தீபம் ஏற்றப்படுகின்றது. 30 மீட்டர் காடாத் துணியும் 2 கிலோ கற்பூரமும் தேவைப்படுகிறது. இந்த ஜோதியின் ஒளி 35 கி.மீ தொலைவு வரை தெரியும்.

திருவண்ணாமலையில் அதிகாலை நான்கு மணிக்கு பரணி தீபம் முருகப்பெருமானுக்கு ஏற்றப்படுகிறது.

இன்றும் தீபதரிசனத்திற்கு முன்பு மலை அடிவாரத்திலுள்ள அண்ணாமலையார் சந்நிதியிலிருந்து அர்த்தநாரீஸ்வரர் புறப்பட்டு குதூகலத்துடன் வேகமாக ஓடி வந்து கொடிக்கம்பத்தைச் சுற்றிச் செல்வார். அவர் வந்து சென்ற உடன் வேட்டு சத்தத்துடன் மலை முகட்டில் தீப ஒளி சுடர்விடும் அதே சமயம் பஞ்சமூர்த்திகளுக்கும் தீபாராதனை காட்டப்படும். பஞ்சமூர்த்திகளும் தீப ஒளியை தரிசனம் செயவர்.

முருகப் பெருமானைக் கார்த்திகைப் பெண்கள் சீராட்டி வளர்த்தனர். அம்பிகை அருளால்   முருகப்பெருமான் கார்த்திகேயனாக ஒருமுகக் கடவுளானார். இதன் காரணமாக   ‘பரணி தீபம்’ கொண்டாடப்படுகிறது.

ஞானஒளியைத் தரும் இக்கார்த்திகை மாதத்தில், கந்தனின் கதையை விரிவாக உணர்த்தும் எங்களது வெளியீடான ” கந்த புராணம் ” மற்றும்  மணியான பாடல்கள் அடங்கிய ” சைவத்திரு முறைகள் ” போன்ற புத்தகங்களைப் படித்து  அண்ணாமலையானின் பரிபூரண அருளைப்பெறுவோமாக!

 

நவராத்ரி

navarathri0001ஸ்ரீ ராமனுக்கு இராவணனை சம்ஹாரம் செய்யும் பூரண வலிமையை கொடுக்கும் ‘ஸ்ரீ பஞ்ச தசாக்ஷரி’ என்ற ஸ்ரீ வித்யா மகா மந்திரத்தை வலது காதிலே உபதேசிக்கப்பட்டதால்,ஸ்ரீ ராமன், தேவி பக்தனாக மாறிப் புரட்டாசி மாதம் சுக்ல பக்ஷ பிரதமை முதல் நவமி முடிய ஒளியான ஒன்பது நாட்களிலும்  இரவில் நியம நிஷ்டையுடன் பூஜை செய்தமையால் சிறந்த நவராத்ரியாக ஒளிர்விட்டது.  இராமனும் அன்னையை வழிபட்டு  தசக்ரீவனை சம்ஹாரம் செய்தார். தேவி பாகவதம், தேவிமகாத்மியம், செளந்தரியலஹரி, லலிதா ஸகஸ்ரநாமம் , அபிராமி அந்தாதி முதலான சக்தி வாய்ந்த நூல்களைப் படித்து அன்னையின் அருளைப் பெறுவோமாக!…….வசுதாமுரளி

கடும் வெயில் காலமும் – கடும் மழைக் காலமும் எமனின் இரண்டு கோரைப்பற்கள் என ஞான நூல்கள் சொல்கின்றன. இந்த இரண்டு
காலத்திலும் பலவிதமான நோய்கள் நம்மைத் தாக்கும். உடலை பாதிக்கும். அதனால் உள்ளமும் பாதிப்பு அடையும். இந்த இரு வகையான பாதிப்புகளில் இருந்தும் நம்மைக் காப்பவள் அம்பிகை. அதனால்தான் அவளுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு நாம் ‘நவராத்ரி’ என்ற பெயரில் ஒன்பது இரவுகள் அம்பிகையை வழிபடுகிறோம்.

தேவிபாகவதம்:….

தக்ஷப் பிரஜாபதியின் மகள் தாட்சாயணி, தக்ஷன் விருப்பத்துக்கு மாறாக ஈசனை மணக்கிறாள். அதனால் தக்ஷன் ஈஸ்வரன்பால் வெறுப்புற்றான், தான் செய்யும் யாகத்துக்கு ஈசுவரனை அழைக்கவில்லை. எனினும் தாட்சாயணி கணவருக்காக நியாயம்
கேட்டு அங்கே சென்றாள். தன்னையும் தன் கணவரையும் தந்தை நிந்திப்பதைக் கேட்டு மனம் பொறாது அங்கேயே உயிர்த்தியாகம் செய்தாள். இதனால் கோபம் அடைந்த சிவன் யாகத்தை அழித்து, தக்ஷனையும் சிரச்சேதம் செய்தார். உயிர் நீத்த தேவியின் உடலைத் தோள்மீது போட்டுக்கொண்டு திரியலானார். மகாவிஷ்ணு தனது சக்ராயுதத்தால் அந்தப் புனித உடலைத் துண்டுகளாகும்படிச் செய்து சிவபிரானின் தாபத்தைத் தணித்தார். அப்படித் துண்டுகளாகிய தேவியின் உடல் பல இடங்களிலும் விழுந்தது. அப்படி மண்ணில் விழுந்த இடங்களே சக்தி பீடங்கள் எனப்போற்றப்படுகின்றன.
சாக்தபீடங்கள் நான்கு , ஏழு , எட்டு , பத்து, பதினெட்டு, நாற்பத்து இரண்டு, ஐம்பது, ஐம்பத்து இரண்டு, நூற்றுஎட்டு என்று பல விதமாகவும் கூறப்படுகின்றன. குறிப்பாக அன்னையின் தேகம் அக்ஷரமயமானதால் அக்ஷரங்களின் எண்ணிக்கைப்படி ஐம்பத்தி ஒன்று எனச் சொல்லப்படுகின்றன. இந்த சாக்த பீடங்களும்,மற்ற தேவிக்ஷேத்ரங்களும் சேர்ந்து பாரதநாட்டைப் புண்ணிய பூமி யாக்குகின்றன.
முப்பெரும் தேவியர்:
நவராத்ரியின் போது, முதல் மூன்று நாட்கள் ‘ துர்கை’ வழிபாடாகவும், இரண்டாவது மூன்று நாட்கள் ‘லட்சுமி‘ வழிபாடாகவும், மூன்றாவது மூன்று நாட்கள் ‘சரஸ்வதி’ வழிபாடாகவும் செய்யப்படுகிறது. இந்த மூன்று சம்ஹாரத்தில் ஆரம்பத்தில் வரக்கூடிய மது-கைடப சம்ஹாரத்தில் வரக்கூடியவள் துர்க்கையாகவும்,அடுத்து மஹிஷனை மாய்த்தவள் மஹாலட்சுமி ஆகவும்,மூன்றாவது கதையில் வரும் சும்ப-நிசும்பனை சம்ஹாரம் செய்தவள் மஹாசரஸ்வதியாகவும் தேவி பாகவதத்தில் சொல்லப்பட்டுள்ளது .

தேவி மகாத்மியம் :
தேவி மூன்று வடிவுடையவள் அசுரர்களை அழித்து தேவர்களுக்கு அருள் புரியும் காளிரூபம், லக்ஷ்மீ ரூபம், ஸரஸ்வதி ரூபம்.
தேவர்கள் செய்த கடும் தவத்தினால், தன் சக்தி சேனைகளுடன் சென்று, சண்டாமுண்டன், ரக்த பீஜன், சும்ப-நிசும்பன், மகிஷாசுரன் போன்ற அசுர அரக்கர்களை கடும் போரிட்டு வதம் செய்த கதைகளின் தொகுப்பே “தேவி மகாத்மியம்” எனப்படுவது.தேவி மகாத்மிய பாராயணத்தை ஏழு பகுதிகளாகப் பிரித்தோ அல்லது முழுவது மாகவோ நவராத்ரி நாட்களில் படிப்பவர்கள், தங்கள் குலத்தின் பாவ மூட்டைகளை எரிக்கிறார்கள். எவன் ஒருவன் இந்தத் தேவி மகாத்மியம் படிக்கப்படும் இடத்தில் அமர்ந்து கேட்கிறானோ அவன் பாவங்களில் இருந்து விடுபடுகிறான். பணக்கவலையும், மனக்கவலையும், தீர’ தேவிமகாத்மிய’ பாராயணமே சிறந்த வழி.

கொலு: ப்ரம்மா, விஷ்ணு, சிவபெருமானின் சக்தி ஒன்றாக இணைந்து அக்னி பிழம்பாக அதிலிருந்து தேவி வெளிவந்து, பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன், எமதர்மராஜன் முதல் அனைத்து தேவர்களும் தெய்வங்களும் தங்கள் ஆயுதங்களையும் அவருக்கு அளித்து சக்தி அனைத்தையும் துறந்து பொம்மைகளாக மாறி நின்றனர். அதனால் அம்பாளைத் தவிர மற்ற தெய்வங்களை பொம்மைகளாக’ கொலு’ என்று புரட்டாசி அமாவாசையன்று, நல்ல சுப நேரத்தில் வைப்பதாக ஐதீகம்.

கொலு வைப்பது:

‘அகிலத்தில் இருக்கும் அத்தனை ஜீவராசிகளிலும் அம்பிகை பரவி இருக்கிறாள். அவள் கருணையினால் தான் அனைத்தும் உயிர் வாழ்கின்றன!’ என்பதை விளக்கவும், எந்தெந்த படிகளில் எந்தெந்த பொம்மைகளை வைக்கவேண்டும் என்ற ஐதீகத்தையும் வைத்தார்கள் நமது முன்னோர்கள்.

படி                                      தன்மை                                 பொம்மைகள்

கீழிருந்து 1                     ஓரறிவு                    செடி,கொடி,மரங்கள், பூங்கா……

2                                        இரண்டறிவு            நத்தை,சங்கு,- மெள்ள ஊர்வன….

3                                       மூன்றறிவு              எறும்பு -  தரையில்  ஊர்வன…

4                                       நான்கறிவு              பறவை, வண்டு – பறப்பன

5                                     ஐந்தறிவு                  பசு போன்ற விலங்கினங்கள்

6                                    ஆறறிவு                   மனித பொம்மைகள்,செட்டியார்

7                                     மகான்கள்             ஆதிசங்கரர், விவேகானந்தர்,

8                                   தெய்வம்                   தசாவதாரம்

9                                   பூரண கும்பம்       அம்பிகையின் திரு உருவம்

அம்பிகையின் அருளாடலின் கீழேதான் அனைத்து ஜீவராசிகளும் வாழ்கின்றன என்பதுடன், அவை படிப்படியாக முன்னேறி உயர்கின்றன
என்பதையும் இந்த கொலு அமைப்பு விளக்குகிறது.
பன்பெயர் நாயகி :  அம்பாள் அனேக அம்சங்களை உடையவள். யார் யார் எப்படி விரும்புகிறார்களோ அம்முறையில் அம்சங்களை ஏற்று அவள் காட்சி தருகிறாள். எங்கும் நிறைபொருளாகக் காணப் படும் போது அவள் பூரணி என்று அழைக்கப்படுகிறாள். சக்தி நிறைந்த வளாய், சர்வ வல்லமை பொருந்தியவளாய் போற்றப்படும்போது பராசக்தி என்றும், ராஜராஜேஸ்வரி என்றும்,மூலப்பிரகிருதி என்றும் பெயரிடப்படுகிறாள். முத்தொழிலைச் செய்யுமிடத்து பிரம்மாணி, வைஷ்ணவி, ராத்ராணி என்று அவள் பெயர் படைக்கிறாள்.சகுணப் பிரம்மம் அல்லது ஈசுவரனுக்கு ஒப்பாகும் போது துர்கை எனப் படுகிறாள். கால சொரூபிணியாகத் தோன்றுமிடத்துக் காளியாகிறாள். வித்தையின் வடிவமாகும்போது ஸரஸ்வதி என்றும், தனதான்ய
வடி வெடுக்கும்போது லக்ஷ்மி என்றும் அழைக்கப்படுகிறாள். ஞாலத்தை ஆதரிக்கும் மகாதேவி, ஜகதாத்ரியாகவும், பவதாரிணியாகவும் போற்றப்படுகிறாள்.

துர்கா பூஜை : இமவானின் புத்ரியாக அவள் இறங்கி வரும் திருவிழாவே துர்கா பூஜைத்திருவிழாவாகப் போற்றப்படுகிறது. அப்படி அவள் வரும்போது லட்சுமி, ஸரஸ்வதி, கணேசன், கார்த்திகேயன் ஆகியோர் உடன் வருகிறார்கள். மனிதனின் நல் வாழ்வுக்குத் தேவையான அத்தனை அம்சங்களும் கொண்ட சிறு சேனையின் தலைவியே அவள். அவளே அனைத்தும் ஒருங்கமைந்த சக்தி சொரூபம். செல்வத்தைப் பெருக்கும் சின்னமாக லக்ஷ்மி, கலைஞானங்கள் அளிக்க ஸரஸ்வதி, விக்னமின்றிச் செயல்பட கணபதி, ஆற்றலை வளர்க்க முருகன் இப்படி அம்பிகையின்
அம்சங்களாகவே இந்த நால்வரையும் பார்த்துத் தொகுத்து வழிபடுவதுதான் துர்கா பூஜை. நிறைவாழ்வின் பொலிவுகளை விளக்குகின்ற சக்தியாக அவை அமைந்துள்ளன.

நவராத்ரியின்போது செய்ய வேண்டிய நவ கன்னிகை பூஜை:

நவராத்ரி காலத்தில் ஒன்பது நாட்களும் விதிப்படி கன்னிகைகளை பூஜை செய்யவேண்டிய முறைகளையும் அதன் பலன்களையும் வியாசர்விரிவாகக் குறிப்பிடுகிறார். சுருக்கமான விதிகள்:

நாள்                               பெண்ணின் பெயர்                                பலன்

முதல் நாள்             குமாரிகா-சுமார் 2 வயது                    தரித்திர நாசம்

2 வதுநாள்                திரிமூர்த்தி – சுமார் 3 வயது              தனதான்ய வளம்

3வது நாள்                கல்யாணி – சுமார் 4 வயது               பகை ஒழிதல்

4வது நாள்                ரோகிணி – சுமார் 5 வயது                 கல்வி வளர்ச்சி

5வது நாள்               காளிகா – சுமார் 6 வயது                    துன்பம் நீங்குதல்

6வது நாள்               சண்டிகா -சுமார் 7 வயது                  செல்வ வளர்ச்சி

7வது நாள்              ஸாம்பவி -சுமார் 8 வயது                க்ஷேம விருத்தி

8வது நாள்               துர்கா -சுமார் 9 வயது                          பயம் நீங்குதல்

8வது நாள்              சுபத்ரா-  சுமார் 10 வயது                   ஸர்வ மங்களம்

உண்டாதல்

நவராத்ரி பூஜையின் விரிவான விளக்கங்களுக்கு ‘லிப்கோ‘வின் “நவராத்ரி பூஜை” நூலைக்காண்க…. 636

இந்தியாவில் நவராத்ரி: இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் நவராத்ரி விழா ஒவ்வொரு பெயரிலும் கொண்டாடப்படுகிறது. அதே போலக் கர்நாடகத்தில் தசராவென்றும்,தமிழ்நாட்டில் நவராத்ரி என்றும் பெண்கள், குழந்தைகள், கலைஞர்கள், சிற்பிகள், வித்வான்கள், தொழிலாளர்கள் என்று அனைவரையும் ஈடுபடுத்தும் மகோன்னத பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இப்படி நாடு முழுவதும், எல்லாப் பிரிவினரையும்  ஈடுபடுத்தும் தனிப்பெருமை நவராத்ரி விழாவிற்கு இருக்கிறது. மரப்பாச்சிகளால் ஆன கொலுவையே மைசூர் வாசிகள் நவராத்ரியில் வைத்து மகிழ்கிறார்கள். மகாராஷ்டிரத்தில் நவராத்ரி முதல் நாளன்று, சிறு மண்தொட்டிகளில் நவதான்யங்களைத் தூவி பாலிகை வளர்ப்பார்கள்.
நவராத்ரி ஒன்பது நாட்களும் தேவி பூஜையைச் சிறப்பாகக் கொண்டாடி, விஜயதசமியன்று பெண்கள், பாலிகையை ஆற்று நீரில் கரைத்துவிட்டு வருகிறார்கள். நாகை மாவட்டம் கூத்தனூரில் உள்ள ஸரஸ்வதி கோயில் பிரபலமானது. இங்கு சரஸ்வதி பூஜையன்று அம்பாளின் பாதங்கள் வெளிமண்டபம் வரை நீண்டிருக்குமாறு அலங்காரம் செய்வர். அன்று எல்லோரும் தேவியின் பாதங்களுக்கு மலர் மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம். ஹிமாச்சலத்திலுள்ள ‘குலு‘ என்னும் பகுதியில் உள்ள சிறிய கோயில்களிலிருந்து விக்ரஹங்கள் ஊர்வலமாக
கொண்டுவரப்பட்டு, ரகுநாத் ஜி மந்திர் முன்பு நவராத்ரி விழா நடத்தப்படுகிறது. மேற்கு வங்காளத்தில் பொது இடங்களில் கூட மகிஷாசுரமர்த்தினி திருவுருவம் வைக்கப்பட்டு, தசரா பூஜைகள் செய்யப்படுகின்றன. விஜயதசமி அன்று பூஜை செய்யப்பட்டு சிலைகள் ஊர்வலமாக வீதிகளில் உலாவந்து கடலில் கரைக்கப்படுகின்றன.

வடநாடுகளில் நவராத்ரி நாட்களில் ‘ ராம் லீலா‘ என்ற நிகழ்ச்சி பொது இடங்களில் நடக்கிறது. துர்கை மகிஷாசுரனை வென்ற நாள்
விஜயதசமி என்று கூறப்பட்டாலும், சில இடங்களில் ராமன் ராவணனை வதைத்த தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

வெளிநாட்டிலும் ஸரஸ்வதி வழிபாடு:

ஜப்பான் நாட்டில் ஸரஸ்வதியை’ பென்டன்’ என்றும் திபெத் நாட்டில் ஸரஸ்வதியை ‘யங்சன்ம’ என்ற பெயரிலும் வழிபட்டு மகிழ்கிறார்கள்
பாலித்தீவுப்பகுதியில்’கலுங்கன்’ என்று ஸரஸ்வதியைத் துதிக்கின்றனர்.

நவராத்ரியில் செய்யவேண்டியவையும் செய்யக்கூடாதவையும்:

ஒன்பது நாட்களும் “வபனம்” (முடி நீக்குதல்) ஆகாது: மருந்துண்ணல் கூடாது.
பொய் நீக்கிய வாழ்வும் அன்னை புகழ் பேசும் நாவும் கொண்டு விளங்கவேண்டும்.
இரவில் பட்டினி இருத்தல் வேண்டும். ஒரு சிலர் பகலெல்லாம் நோன்பு இருந்து,  இரவில் அன்னையின் வழிபாடு நிறைந்த பின் சிற்றுணவு கொள்வதுண்டு. இதுவும் ஏற்றதே!
இந்த ஒன்பது நாட்களிலும் பானகமும், தேனும் நிவேதிப்பது மிகவும் அவசியம். இக்காலத்தில் வீட்டிற்கு வரும் சுவாசினிகளை ஜன்ம விரோதியாக் இருந்தாலும் சக்திவடிவமாகவே பாவித்து தாம்பூலம் அளித்து அவர்களுக்குரிய மரியாதைகளைச் செய்தல் வேண்டும்.
தேவி பாகவதம், தேவிமகாத்மியம், செளந்தரியலஹரி, லலிதாஸகஸ்ரநாமம் முதலான ஸம்ஸ்க்ருத நூல்களும் அபிராமி அந்தாதி,அபயாம்பிகை சதகம் முதலான தமிழ் நூல்களும் அம்பாளின் பெருமைகளை உணர்த்துபவை. இத்தகைய சிறப்பு வாய்ந்த நூல்களைப் படித்து அம்பிகையின் அருளை பெறுவீர்களாக! மேலும் நவராத்ரியில் முதல் மூன்று நாட்கள் துர்க்கா அஷ்டோத்ரமும், ஸஹஸ்ரநாமமும்,அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மி அஷ்டோத்ரமும்,ஸஹஸ்ர நாமமும், அடுத்த மூன்று நாட்கள் ஸரஸ்வதி அஷ்டோத்ரமும்,ஸஹஸ்ரநாமமும் இவற்றில் ஏதேனும் ஒன்றையாவது பாராயணம் செய்து, நற்பலன்களைப் பெறுவோமாக!