Home

'லிப்கோ' ஸ்தாபகரைப் பற்றி

E-mail Print
Article Index
'லிப்கோ' ஸ்தாபகரைப் பற்றி
ABOUT OUR FOUNDER
All Pages

Foundercouple
நல்லான் சக்ரவர்த்தி குடும்பப் பரம்பரை...

"வாழ்வாங்கு வாழ்வதற்கு வழிகாட்டும் பல நூறு நூல்களை வெளியிட்டுத் தமிழ்ப் பெருமக்களுக்கு ஒப்பற்ற சேவை செய்யும் லிப்கோ புத்தக வெளியீட்டு நிறுவனத்தைத் தொடங்கித் தமிழகப் புத்தகப் பிரசுர வரலாற்றில் ஒரு தனி இடம் பெற்றுத் திகழ்பவர் வரதாசாரி கிருஷ்ணஸ்வாமி சர்மா அவர்கள்." - TAMBRAS என்ற அமைப்பு வெளியிட்ட நூலிலிருந்து லிப்கோ நிறுவனத்தைத் தொடங்கி ஆன்மீகத் துறையில் அநேக நூல்களை வெளியிட்டு புனிதச் சேவை செய்த அமரர். திரு. சர்மா அவர்கள், "லிப்கோ"வை லிப்"கோவிலா"கச் செய்தவர். - எனக் கூறியவர் சாவி புத்தக எழுத்தாளர் திரு. சா. விஸ்வநாதன் அவர்கள்.

ஸ்ரீ வி.கிருஷ்ணஸ்வாமி சர்மா அவர்கள் 1908 -ஆம் வருடம் டிஸம்பர் மாதம் 7-ம் தேதியன்று பிறந்தார். பழைய தென்னாற்காடு மாவட்டம் மேட்டுப்பாளையம் என்ற கிராமமே அவர் பிறந்த ஊர். உலகப் பெருந்தலைவர் ராஜாஜி அவர்கள் தோன்றிய 'திருமலை நல்லான் சக்ரவர்த்தி' என்னும் சிறப்பு மிக்க பரம்பரையில்தான் கிருஷ்ணஸ்வாமி சர்மாவும் பிறந்தார். கிருஷ்ணஸ்வாமி சர்மா தணிக்கைத் துறையில் ஜி.டி.ஏ.("ஏ.சி.ஏ" என்று இன்று அறியப்படும்) தேர்வில் வெற்றி பெற்று, பல கோயில்களின் கணக்குகளைத் தணிக்கையும் செய்திருக்கிறார். பிற்காலத்தில் ஆன்மீகத்துறையில் புத்தகங்களை வெகுவாக வெளியிடுவதற்கு இக் கோயில்களில் ஸ்ரீ சர்மா செய்த கணக்கு சேவை ஒருவேளை அடிகோலியதோ!

லிப்கோ' பிறந்த கதை

கிருஷ்ணஸ்வாமி சர்மா புத்தகங்களை வெளியிடும் ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்க விரும்பினார். அவர் சிறுவராக இருந்தபோது கடலூர் ஸெயிண்ட் ஜோஸப் உயர்நிலைப் பள்ளிக்கூட மாணவர் என்ற வகையில், அந்த பள்ளிக்கூடத்தின் முதல்வர் பூஜ்யஸ்ரீ வெர்ஜர் பாதிரியாரிடம் மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார். அந்தப் பாதிரியாரிடம் புத்தக வெளியீட்டு நிறுவனம் குறித்து யோசனை கேட்டார். ரோமன் கத்தோலிக்கக் கிறித்துவர்களின் ஒரு புனிதமான தெய்வமான 'லிட்டில் ப்ளவர்' என்னும் பெயரைப் பிரசுர நிறுவனத்திற்கு வைக்குமாறு அந்தப் பாதிரியார் யோசனை கூறினார். கிருஷ்ணஸ்வாமி சர்மா அந்த யோசனையை ஏற்றுக் கொண்டார். கிருஷ்ணஸ்வாமி சர்மா 'லிட்டில் ப்ளவர்' என்ற பெயரை ஏற்றதற்கு மற்றொரு காரணமும் உண்டு. வைணவ நம்மாழ்வாருக்கு வகுளாபரணர் என்ற ஒரு பெயரும் உண்டு. வகுள புஷ்பம் சிறியதாகவும், அழகானதாகவும், வாசனை கொண்டதாகவும் விளங்கும். அந்த சிறிய புனிதமான பூவைக்கருத்தில் கொண்டும்,'லிட்டில் ப்ளவர்' என்ற பெயர் அமைந்தது. இவ்வாறாக 'தி லிட்டில் ப்ளவர் கம்பெனி' 1929-ம் ஆண்டில் பிறந்தது.

அத்துவைதிகளையும், துவைதிகளையும் இணைக்கப் பாடுபட்டார்...

ஸ்ரீ வி.கிருஷ்ணஸ்வாமி சர்மா ஒரு சிறந்த எழுத்தாளரும் ஆவார். 'பூஜா பாகவதம்' என்ற புனிதமான நூலை அவர் இளமையிலேயே எழுதி வெளியிட்டார். அவர் சில நாவல்களையும் எழுதி இருக்கிறார். ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி ஓர் உயர்ந்த நோக்கத்துடன் வாழ்ந்தார். வடகலை, தென்கலை வைணவப் பிரிவினரை முதலில் ஒற்றுமைப்படுத்தி, பிறகு அத்துவைதிகளையும், துவைதிகளையும் ஐக்கியப்படுத்த வேண்டும் என்பதும் அவர் நோக்கம். அதைச் செயல்படுத்த அவர் வாழ்நாள் முழுவதும் உழைத்தார்.

ஆன்மீகப் புத்தகங்கள்:

ஏற்கனவே ஆன்மீகத்தில் வெகுவாக ஈடுபாடு கொண்ட ஸ்ரீ சர்மா அவர்களுக்கு காஞ்சி மாமுனி 1958-ல் எங்கள் கம்பெனிக்கு விஜயம் செய்தபோது "ஆன்மீகப் புத்தகங்களை நிறைய வெளியிடுங்கள்" என்றிட்ட கட்டளை ஒரு பலமான திருப்பு முனையாக அமைந்தது

எதிலும் முதன்மை...

ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி சர்மா பல பணிகளில் முதலாமவர். "இந்தியப் புத்தக வெளியீட்டாளர், விற்பனையாளர் சங்கம்" என்ற அமைப்பை 1931-ஆம் ஆண்டில் முதன்முதலாக ஆரம்பித்தவர் அவர்.

உடற்பயிற்சிக் கல்வி குறித்து மிகச் சிறந்த ஒரு புத்தகத்தை முதன்முதலாக வெளியிட்டவர் அவர்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் பல நூறு வெளியீடுகள் அடங்கிய ஒரு பட்டியலைத் தயாரித்து முதன்முதலாக வெளியிட்டவர் அவர்.

தபால்-தந்தி இலாகாவுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி நூலை முதன்முதலாக பிரசுரித்தவரும் அவரே.

"புத்தகங்களுக்கு நடமாடும் நிலையமா?" என மக்கள் வியக்கும் வண்ணம் 1954-ஆம் வருடத்திலேயே மோட்டார் வேன் மூலம் ஊர் ஊராக விற்பனை செய்ய ஏற்பாடு செய்தார்.

1930-ஆம் வருடத்தில் சென்னையில் அரசினர் வணிகக் கழகத்தில் 'தணிக்கை மாணவர்கள் சங்கம்' என்று முதன்முறையாக அமைத்தார்.

ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி சர்மா இவ்வளவு பணிகளையும் ஆரவாரம் இல்லாமல் அடக்கமாகச் செய்து முடித்தார் என்பது சிறப்புச் செய்தி.

நங்கநல்லூர் ஸ்ரீ லக்ஷ்மிஹயக்ரீவர் ஆலயம் எழும்ப காரணகர்த்தா...

கிருஷ்ணஸ்வாமி சர்மா ஸ்ரீ லக்ஷ்மீஹயக்ரீவரிடம் இடையறாத பக்தி கொண்டவர். சென்னை நங்கநல்லூரில் ஸ்ரீ லக்ஷ்மீஹயக்ரீவருக்கு ஆலயங்கள் எழுப்பப்பட்டதில் அவர் பிரதான பங்கு வகித்தார். இவ்வாறு பலப்பல சமயப் பணிகளை அவர் ஆற்றியுள்ளார். ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி சர்மாவின் பெரும் பணிகளைப் பாராட்டி மைசூர் ஸ்ரீ பரகால மட ஜீயர் ஸ்வாமிகள் 25-6-1977 அன்று 'ஹயக்ரீவ சேவா ரத்னம்' என்ற பட்டத்தை கிருஷ்ணஸ்வாமி சர்மாவுக்கு அளித்து அருளினார்.

இலவச ஸ்ரீசடாரி சமர்ப்பணம்...

கிருஷ்ணஸ்வாமி சர்மா தலைமையில் ஆரம்பித்த பல அறப்பணிகளை 'லிப்கோ' நிறுவனம் தொடர்ந்து செய்து வருகிறது. அவற்றில் மிகவும் முக்கியமாகக் குறிப்பிடவேண்டிய ஒரு மாபெரும் பணி 'ஸ்ரீசடாரி சமர்ப்பணம்'. ஸ்ரீசடாரி இல்லாத/பழுதாகிவிட்ட திருக்கோயில்கள் அனைத்துக்கும் தாமிரத்தால் செய்யப்பட்ட ஸ்ரீசடாரிகளை அந்த நிறுவனம் பக்தியுடன் சமர்ப்பித்து வருகிறது. இதுவரை அந்த நிறுவனம் திருக்கோயில்களுக்கு சமர்ப்பித்த ஸ்ரீசடாரிகளின் எண்ணிக்கை 2100-ஐ எட்ட இருக்கிறது.

மறைவு...

ஸ்ரீ வி.கிருஷ்ணஸ்வாமி சர்மா 1979 -ம் வருடம் ஜூலை மாதம் 22-ம் தேதியன்று ஆண்டவன் திருவடி அடைந்தார். கண்தானம் என்பது வெகுவாக பிரபலம் ஆகாத 1979-லேயே, ஒரு வைணவ ஆசார குடும்பத்தைச் சேர்ந்தவராய் இருந்தாலும், சர்மாஜி தம் இரு கண்களையும் ஸ்ரீ சங்கர நேத்ராலயாவின் 'கண் தான மையத்திற்கு' தானம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

'ஸ்ரீசடாரி சேவக', 'ஸ்ரீ ஹயக்ரீவ ஸேவா ரத்நம் ', 'பக்தி பிரசாரண பிரவீண' போன்ற பல பட்டங்களைப் பெற்ற ஸ்ரீ வரதாசாரி கிருஷ்ணஸ்வாமி சர்மா அவர்கள் புத்தக வெளியீட்டாளர்களிடையே ஒரு வைரமாக என்றென்றும் ஒளி வீசிக்கொண்டிருக்கிறார் என்பதில் ஐயமில்லை.