| Article Index |
|---|
| லிப்கோ நிறுவனம் |
| ABOUT LIFCO |
| All Pages |
வடமொழிப் புலமைக்காக ஜனாதிபதி விருது பெற்ற ஒப்பிலியப்பன் ஸந்நிதி, ஸ்ரீ உ.வே.வங்கீபுரம் நவநீதம் ஸ்ரீ ராமதேசிகாசார்ய ஸ்வாமி, லிப்கோவைப்பற்றி வழங்கியுள்ள ஆசியுரையிலிருந்து:
"நாட்டுக்கு நலம் புரிவதையே குறிக்கோளாகக் கொண்டு நெடுங்காலமாகப் பற்பல தொண்டுகளைப் பல்வேறு வழிகளில் ஆற்றிவரும் சென்னை லிப்கோ ஸ்தாபனத்தை அறியாதார் இலர். இந்த ஸ்தாபனம் சென்னையில் இருந்துகொண்டு தமிழ் நாடு முழுவதும், வட நாட்டிலும், கடல் கடந்தும் கூட அறிவுச் சுடரை ஏற்றிப் பல நன்மைகளை விளைவித்துவருகின்றது. சிறுவர் தொடங்கி முதியவர் வரை அனைவருக்கும் நல்வழி காட்டும் புத்தக நிறுவனம் இது ஒன்றே என்றால் மிகையாகாது".
1940 மற்றும் 1950களில் லிப்கோ நிறுவனம் ஆங்கில இலக்கணம் மற்றும் கட்டுரைப் புத்தகங்களுக்கான நோட்ஸ் எனப்படும் கைடு (Guide) புத்தகங்கள் வெளியிடுவதையே தனது பிரதான தொழிலாகக் கொண்டிருந்தது. அடுத்த காலக்கட்டத்தில்தான் ஆன்மீகப் புத்தகங்கள் வெளியிடுவதில் முழுமூச்சாக ஈடுபட்டது எனக் கூறலாம். LIFCO (லிப்கோ) என்னும் வைணவப்புஸ்தக நிறுவனத்திற்கும், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் மடாதிபதிகளுக்கும் ஆரம்பத்திலிருந்தே நிறைய தொடர்பு இருந்திருக்கிறது/இருந்தும் வருகிறது...
1949-ல் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவர்கள் விழுப்புரத்தின் அருகே 'வெங்கடாத்ரி அகரம்' என்னும் கிராமத்திற்கு விஜயம் செய்தபோது, லிப்கோ சர்மா அவரை தரிசிக்க அங்கு சென்றிருந்தார். அப்பொழுது ஸ்ரீ காஞ்சி பெரியவர் சர்மாவிடம் இட்ட ஆக்ஞைப்படி காளிதாஸரின் 'ரகுவம்ஸம்' புத்தகமாக வெளிவந்தது. 30-3-1958-ல், பரமாச்சார்யாள் ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் LIFCO நிறுவனத்திற்கு விஜயம் செய்த போது ஆன்மீகப் புத்தகங்களை அதிக அளவில் வெளியிடும்படி ஆக்ஞை பிறப்பித்து ஆசீர்வதித்தார். அவர் கட்டளையைத் தலைமேற்கொண்டு அன்று முதல் இந்த நிறுவனம் ஆன்மீகப் புஸ்தகங்களைத்தான் அதிக அளவில் வெளியிட்டுக்கொண்டு தமிழகத்திற்குத் தொண்டாற்றி வருகிறது.
ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி சர்மா அவர்கள் 1929-ல் தொடங்கிய 'லிப்கோ' என்ற 'லிட்டில் ப்ளவர் கம்பெனி' பல அரிய நூல்களை வெளியிட்டுத் தமிழ் நாட்டுக்குச் சேவை செய்துவருகிறது. கீர்த்தனாசார்ய ஸ்ரீ ஸி.ஆர்.ஸ்ரீநிவாஸ ஐயங்கார் இயற்றிய, ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்' இந்நிறுவனத்தின் மகத்தான வெளியீடாகும். இந்நூலின் தமிழ் வசனம் மொத்தம் 1800 பக்கங்களில், இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. இதிலிருந்து 'ஸுந்தர காண்டம்' தனியான புத்தகமாகவும் வெளியிடப்பட்டிருக்கிறது. வே.ஸ்ரீ.வேங்கடராகவாசாரியர் எழுதிய 'ரகுவம்ச மஹாகாவ்யம்', கீழாத்தூர் ஸ்ரீ ஸ்ரீநிவாஸாச்சாரியர் இயற்றிய 'ஸ்ரீமத் பகவத் கீதை', "108 ஸ்ரீ வைஷ்ணவ திவ்யதேச வைபவமும் புராண அபிமான ஸ்தலங்களும்" (தமிழ்), 'ஸ்ரீமந் நாராயணீயம்', ஆழ்வார்கள் அருளிச்செய்த 'நாலாயிர திவ்யப்பிரபந்தம்' வெளியிட்டுள்ளது. மேலும் 'ஸ்ரீ தேசிக ஸ்தோத்ர மாலா', (ஸம்ஸ்க்ருதம், தமிழ் எழுத்துக்களில்) கூடிய பல மிகச் சிறந்த நூல்களை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அகராதித் துறையில் என்றுமே லிப்கோ தலைசிறந்து விளங்குகிறது என்றால் அது மிகையாகாது.. 1568 பக்கங்கள் கொண்ட ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ் அகராதி வரிசையில் பிரம்மாண்ட (Mega) அகராதி ஒன்றையும், தமிழ் - தமிழ் - ஆங்கிலம் அகராதி, ஆங்கிலம் - ஆங்கிலம் - தெலுங்கு அகராதி, ஹிந்தி - தமிழ் அகராதி ஆகியவற்றையும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மக்களிடையே நல்ல இயல்புகளையும், அமைதியான வாழ்க்கை முறைக்கேற்ற மனப்பக்குவத்தையும் உருவாக்கி வளர்க்கக்கூடிய ஏராளமான நூல்களைக் குறைந்த விலையில் லிப்கோ வெளியிட்டு வருகிறது என்பதே பொதுமக்களின் ஏகோபித்த கருத்து. லிப்கோவைப் பற்றிய சிறப்புக் கட்டுரைகள் பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. 'TAMBRAS' (Tamil Nadu Brahmins Association) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ''அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள்'' என்ற வெளியீட்டில், பதிப்பகத் துறையில் தலைசிறந்த மூவருள் 'லிப்கோ ஸ்ரீ சர்மா' வையும் ஒருவராகத் தேர்ந்தெடுத்து புகழ்மாலை சூட்டி, புத்தகத்துறையில் ஸ்ரீ சர்மாவின் சாதனைகளைப் பற்றி விவரமாகப் பட்டியலிட்டு சிறப்பாக எழுதியுள்ளது.
7-12-1979 அன்று லிப்கோவின் 'பொன் விழா வைபவம்' அன்றைய தமிழக ஆளுநர் ஸ்ரீ பிரபுதாஸ் பட்வாரி அவர்கள் தொடங்கி வைக்க மிக விமரிசையாக நடந்தது.
அமரர் ஸ்ரீ வி.கிருஷ்ணஸ்வாமி சர்மா அவர்களின் மூத்த புதல்வரும், லிப்கோ நிறுவனத்தின் ஆலோசகருமான திரு.டி.என்.ஸி. வரதன் மற்றும் அவரின் சகோதரர்களின் சீரிய மேற்பார்வையில் லிப்கோ நிறுவனம் (தி. நகர்-போன்: 24323298, மற்றும் ஸி.ஐ.டி. நகர் - போன்: 24336467 & 24341538) கட்டுகோப்பாக இயங்கிவருகிறது. 2004-ல் இந்நிறுவனம் 'பவளவிழா' வைச் (Platinum Jubilee) (75 ஆண்டுகள் பூர்த்தியை...) சிறப்பாகக் கொண்டாட இருக்கிறது என்பது முன்னோட்டச் செய்தி!
வைரமுத்து (தமிழ் கவிஞர்) -பள்ளிநாட்களில் லிப்கோ அகராதியோடு வாழ்ந்தவன் நான். தமிழ்நாட்டுக் கல்வி வரலாற்றில் அழிக்க முடியாத திருப்பெயர் லிப்கோ. அவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும்.
Sri. R. Rajendran, Administrative Officer, Cuddalore. National Institute of Port Management. - பல வருடங்களாக லிப்கோ புத்தகங்களை வாங்கி, விரும்பி படித்து, பாதுகாக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமைப்படுகிறேன்.
திரு. எம்.எஸ்.உதயமூர்த்தி, சென்னை-41 - மிக நல்ல நூல்கள்-குறிப்பாக ஆன்மீக நூல்களை எல்லோரும் வாங்கக்கூடிய மலிவு விலையில் வழங்கி வருவதைக் கண்ணுற்ற போது நல்லவர்களை மனமாரப் பாராட்டவேண்டும் என்ற எண்ணம்தான் எழுந்தது.
திணமனி. [Tamil News Daily] - லிப்கோவின் வெற்றிக்கு அகராதிப் பதிப்பில் உள்ள பிற்சேர்க்கையும் முக்கியக் காரணமென்றும், மேலும் தமிழ்-ஆங்கில அகராதி, ஆங்கில-தமிழ் அகராதி ஆகிய இரண்டுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது என்றும் கூறுகிறார், மணிமேகலை பிரசுர நிர்வாக இயக்குநர் திரு. ரவி தமிழ்வாணன் அவர்கள்.
His Holiness Srimad Andavan, Srirangam - "...புத்தகத்தின் பொருளைப்பற்றிய விஷயங்கள் எந்த மூலை முடுக்கிலிருந்தாலும் பொறுக்கி எடுத்துச் சேர்த்துவிடுவார்கள்.....அவர்களுடைய புத்தகத்துக்கு நிகர் அவர்களுடைய புத்தகமே."




